ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமிகோவில் நவகுண்டபகூp பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்திவிழா 31-08-2011 பிரதிஷ்டா பிரதமகுரு சிவப்பிரமஸ்ரீ வை.மு.பரம.சண்முகராஷசிவாச்சாரியார்.

தலப்பாடல்கள்

குடாரப்பூர் புலவர் திரு செ. கணபதிப்பிள்ளை அவரகள் ஆறுமுகத்தான்புதுக்குளம்
ஸ்ரீகந்தசுவாமிப் பெருமானைத் துதித்துப் பாடிய திருப்பதிகங்கள்.

இந்தத் திருப்பதிகங்கள் உள்ள ஏடுகளும், வேறும் பல புத்தகங்களும் போரின் இடப்பெயர்வின்போது அழிந்துவிட்டன. இதனை திரு. ச.கார்த்திகேசு அவர்கள் மனனம் செய்து வைத்திருந்தார். அவரது மகன் திரு.கா.தர்மலிங்கம் அவரைக்கொண்டு  பாடவைத்து அப்பதிகங்களை எழுத்துருவாக்கித் தந்துள்ளார்.
  


                                      காப்பு
சித்திதரும் முத்திதரும் செந்திருவைச் சேர்விக்கும்
பத்திதரும் விஞ்ஞானம் பாலிக்கும் - சக்திமிகும்
அறுமுகனை அளித்த அருள்நேசர் தந்த
கரிமுகனைக் கைதொழுதக்கால் 


1 திருமருவு சிவனுமைக்கரியதொரு குமரனாய்ச் செறிநுதலினுற்பவித்துத்
  தேவர்கள் தமக்காகவேயசுர
ர்வேந்தனைச் செய்வேல் விட்டழித்து
  உருமருவு செந்திவந்திந்திரன் மகளாகி உற்ற தெய்வ
யானையை
  உயர்பரங்குன்றிலே திருமணமுடித்துடன் உறுகயிலைதனில் மேவியே
  அருமருவு அம்புவியில் எயினர்குல மங்கைதனை அன்போடு கலந்துவந்த
  அத்தனே அமலமலை முத்தனே அடியேனுக்கரியநின் பாதமருள்வாய்
  கருமருவு நல்லாறுமுகத்தான்புதுக்குளம் கண்கண்ட மூர்த்தியாகி
  கன்னியிருபேரொடு மன்னி அருள்மேவியுறை கந்தசாமிக் கடவுளே! .

2 பூரணையில் மதியுதித்தென்னறுமுகங்களில் பொற்கிரீடம் துலங்க
  புகலரிய பன்னிரு கர
ம்தொறும் உருத்திரப் பேராயுதங்கள் பொலிய
  வாரண மடந்தையும் வள்ளியுமிடம் வலம் மதியிரவி போல வைக
  மார்பிலணிமாலையும் வச்சிர பதக்கமும் வாருவளையமுமிலங்க
  ஆரணமெவைக்குமெட்டா இருபதப்புயத்தணிச் சதங்கைகளுமார
  அரியாசனத்திருந்து அருளுமுனது கிருபையை ஆவல்தீரக் காண்பேனோ
  காரணமதாய் அறுமுகத்தான்புதுக்குளம் கண்கண்டமூர்த்தியாகி
  கன்னியிருபேரொடு மன்னியருள் மேவியுறை கந்தசாமிக் கடவுளே!

3 என்னசெய்வேன் கொடியர் சதியும் வருபிணியுமுளமெண்;ணிடாதேயியற்றி
  எஞ்சியிரு கன்மமும் மிஞ்சிவரு கோள்களும் ஏயமனை மக்கள்துயரும்
  பன்னமுடியாதுயாம் உன்னடி பணிந்திட பக்தியொடு புத்தி பெற்று
  பந்தபாசம் தவிர்வதெந்த நாள் அறிகிலேன் பச்சைமயிலேறும் பரனே
  அன்னமேல் வருமயனை முன்னரும் சிறை வைத்து அகிலமுழுவதுமளித்த
  ஐயனே ஈராறு கையனே மெய்யனே அமலனே நிமல வடிவே
  கன்னல்வயல்சேரறுமுகத்தான்புதுக்குளம் கண்கண்ட மூர்த்தியாகி
  கன்னியிருபேரொடு மன்னியருள் மேவியுறை கந்தசாமிக் கடவுளே!

4 மருளுண்டு புரளுண்டு திரளுண்டு வளர்வுண்டு வயிறுண்டுதித்து மாதின்
  மடியுண்டு கதறுண்டு பாலுண்டுறங்குண்டு மன்னியுடல் மடியப்புரண்டு
  உருளுண்டு தவளுண்டு மலமுண்டு நடையுண்டு உதிர்சருகு மண்ணுமுண்டு
  உடல் நெளிந்தாடியும் படிவிழுந்தோடியும் உற்றாரின் உறவு கண்டும்
  பரிவுண்டு சிற்றாடை பலஅணி அணிந்தும் படித்துனதடிக்கும் இன்னார்
  பலரன்பு கொண்டுமென் கண்டதொன்றில்லை நின்பாதமலர் காணவருவேன்
  கருவிண்டதென ஆறுமுகத்தான்புதுக்குளம் கண்கண்ட மூர்த்தியாகி
  கன்னியிருபேரொடு மன்னியருள் மேவியுறை கந்தசாமிக்கடவுளே.

5 தந்தைதாயைப்பிரிந்து வந்து முறையாயுற்ற சம்சாரமுடனாடியே
  தனுகரண புவன போகங்களில் தவளுது சகலசன வசியமுற்றே
  சிந்தை தெளிவாக வரு மைந்தர் மனை வாழ்விலொரு துயரமறியாதிருந்தேன்
  தேகமுமிளைத்திட சேர்பிணி அலைத்திட செய்வதினியென நினைந்தே
  உந்தனடி தஞ்சமென வந்து தொழு முந்துவினை உற்றவிச் செனனபவமும்
  உடல்மேவு பிணிவாதை யெமவாதை இனியாகும் உருவாதை நீக்கி அருளே 
  கந்தமர நிழலறுமுகத்தான்புதுக்குளம் கண்கண்ட மூர்த்தியாகி
  கன்னியிருபேரொடு மன்னியருள் மேவியுறை கந்தசாமிக்கடவுளே.

6 ஆணவம் கன்மமும் மாயையென மும்மலமறுக்க வகையறியாதுழன்று
  அதனூடு தொடர்காம மோகமதலோபமாச்சரியம் குரோதமாறும்
  தோணவரும் ஐம்புலத்தாறுவழி சேர்ந்திடும் துன்ப இன்பங்களாலே
  தொல்புவியில் வருவதும் போவதும் குறையாத தேகபந்தங்களோடு
  வீணவம் மிருத்துநோய் பேய் பில்லி சூனியம் வேந்தரால் வருதொல்லையும்
  மிடிவறுமை யாவையும் நீக்கியே என்னையும் மீளாத அடிமை கொள்வாய்
  கானவ
மாரறுமுகத்தான்புதுக்குளம் கண்கண்ட மூர்த்தியாகி
  கன்னியிருபேரொடு மன்னியருள் மேவியுறை கந்தசாமிக்கடவுளே!

7 பஞ்சாயுதன் முதல் பலபேரையும் வென்று பதியாளு தாருகனையும்
  பாவியாகிய சிங்கமுகனையும் பகர் சூரபதுமனையுமட்டு; வேலால்
  எஞ்சமுன்சிறை வைத்த தேவர்துயர் நீக்கினாய் ஏழை செய் வன்மமென்ன
  இந்நிலத்தசுரர்கள் சண்டாளர் கோள் பிணிகள் எய்திடாதருளேகனே
  நஞ்சுகடல் மிஞ்சியெழ வஞ்சியரு நின்றுதொழ நாடுசுரர் ஓடியழவே
  நல்லமுதமென்று உட்கொண்டன்று காத்திட்ட நம்பனருளுற்ற முருகா
  பஞ்சமி
ல் வாழறுமுகத்தான்புதுக்குளம் கண்கண்ட மூர்தியாகி
  கன்னியிருபேரொடு மன்னியருள் மேவியுறை கந்தசாமிக்கடவுளே!

8 சித்தமொன்றைம்புலன் அடக்கியொருவழியில் தியானம் புரிந்துமறியேன்
  சுற்றி வலமாய்வந்து அட்டாங்க தெண்டம் தொடர்ந்து செய்தென்றுமறியேன்
  பக்திபெறுவிரதங்களோர்ந்த தர்மதானம் பக்குவம் தீர்த்தமறியேன்
  பரிவினோடாறெழுத்துச்சரித்தே நிதம் பண்ணும்செபங்களறியேன்
  புத்திமிகு நற்குருவின் உபதேசமுற்றிலேன் போதுகலை ஞானமறியேன்
  புண்ணியம் பாவத்தின் உண்மையறியேன் இனிப்பூரணானந்தமருள்வாய்
  கத்துகடலொத்தறுமுகத்தான்புதுக்குளம் கண்கண்டமூர்த்தியாகி
  கன்னியிருபேரொடு மன்னியருள் மேவியுறை கந்தசாமிக்கடவுளே! 

9 பூமிதனில் எழுவகைப் பிறவிதனில் மானிடப் பொய்யுடம்பினையெடுத்து
  பூவையர்கள் மோகத்தினாலுலைந்தின்பமுறு புறமாதர்மனனனாகி
  ஆமிதனில் நிதிபெற்ற தாய்தந்தை சுதர் தாரமாமென்று நானென்றுமே
  ஆசையெனும் மாழ்சுழிப் பட்டுலகவேதனையில் ஆழ்ந்திளைத்தேன் இனிநான்
  சாமியெனவேகண்டு நொந்து தொழுவேனுனை சஞ்சிதங்களை மாற்றியே
  சண்டனெனை அண்டியுயிர் கொண்டிடாதுந்தனிரு தாளளிப்பதுமருமையோ
  காமிகுதியாமறுமுகத்தான்புதுக்குளம் கண்கண்ட மூர்தியாகி
  கன்னியிருபேரொடு மன்னியருள் மேவியுறை கந்தசாமிக்கடவுளே!
 

10 திங்களணி வேணியன் தந்தருளும் மைந்தனே செங்கைவடிவேல் கந்தனே
  தெய்வானை வள்ளி மிகு காந்தனே எமதுவினை தீர்த்தருளும் சிவமைந்தனே
  துங்கமுறு ஐங்கரன் தம்பியே அசுரகுல சூரனை வதைத்த குகனே
  தேவாதிதேவனே பாவாணருக்குதவிசெயும் ஒருஅறு முக முருகனே
  சங்கநிதி பதுமநிதி தந்துநிதமன்பரை தற்காத்து ரட்சித்துமென்
  சற்குருவதாகி இனி உற்பவமொழித்துநின் தாளளித்தருள் ஐயனே
  கங்கையருகாயறுமுகத்தான்புதுக்குளம் கண்கண்ட மூர்தியாகி
  கன்னியிருபேரொடு மன்னியருள் மேவியுறை கந்தசாமிக்கடவுளே!

வாரணமுகன் வாழ்க மாதமாதந்தொறும் மாமழை பொழிந்து வாழ்க
வளர்மாதர் கற்புமிக மன்னர் செங்கோல் நீதி மனுநீதி மல்கி வாழ்க
ஆரணமுதற்கலைகள் ஆகமம் நான்கேழும் அறம்திறம்பாது வாழ்க
அந்தணரும் ஆவினமும் ஆறங்க மாமுனிவர் அரிமுதற்தேவர் வாழ்க
பூரணமதாம் ஞான வேல் சேவல் மயில் சைவம் பொற்பொடு சிறந்து வாழ்க
பொருவில் செல்லப்பா சுதன் கணபதிப்பிள்ளை புகலுமிக்கவிகள் வாழ்க
காரணமதாயறுமுகத்தான்புதுக்குளம் கனவளம் நீடு வாழ்க 
கன்னியிருபேரொடு கந்தசாமிக்கடவுள் கருணையொடு வாழ்க வாழ்க!

                                                            முற்றும்


 



குடாரப்பூர் புலவர் திரு. செ. கணபதிப்பிள்ளை அவர்கள் அருளிய
         “ஆறுமுகத்தான் புதுக்குளம் கந்தசாமி”
                 பேரிலுள்ள திருவூஞ்சல் பாடல்கள்.
 தரு:-
              தானதனா,  தானதனா,  தானதனா
              தனதான,   தந்தனனா,  தானதான                                                       
                            “காப்பு”
                  புவனிமகிழ் வவுனியாக் கிழக்குமூலை
                  பெயர் வடக்கினறுமுகத்தான்புதுக்குளத்தில்
                  நவநிதம் பெற்றிலங்கு கந்த நாதன்மீது
                  நலம் பெருகு மூஞ்சலிசை நயந்து பாடப்
                  பவனி வருங் குடதிசைக்கோபுரத்தின் வைகும்
                  படர் மதியும் பாலநேந்திரமும் பன்னார்
                  கவள மதக் கயவதனப்புரி வெண்கோட்டுக்
                  கணபதியின் சரணமலர் காப்பதாமே.

1.     திருக்கிளரும் மரகதப்பொற் தூண்கள்  நாட்டித்
        திகழ்வுறு கோமேதக நல் விட்டம் மாட்டி
        மருக் கிளரும் மாணிக்கக் கயிறு பூட்டி
        வளர் புட்பராக மணி மலர்கள் சூட்டி
        உருக் கிளரும் பிரணவமார் பீடம் மூட்டி
        உற்ற திரு ஊஞ்சலி வர்த் தொளியே காட்டி
        அருக்கிளருமறு முகத்தான் புதுக்குளத்தில்
        அருள் கந்தசாமி மகிழ்ந்தாடீரூஞ்சல்.


2.    பகருமறுமுகங்களிற் பொற்கிரீடம் மின்னப்
      பன்னிரு கைதனிற் படைகள் பலவுந்துள்ள
      நிகரறு நற்குண்டலமு மணியு மார
      நீடு மதாணிகள் நித்தில மாலை சேர
      சிகர மெனப் பொலிபுயத்தின் வடிவேலோடு
      திகழ் வாகு வளயமணிதிகழ்ந்து மேவ
      அகமலிய வறுமுகத்தான் புதுக்குளத்தில்
      அருள் கந்தசாமி மகிழ்ந்தாடீரூஞ்சல்.

3.    மருத்துவன் சாய் மரரர் வட்டந்தாங்க
       மதியிரவி வெண்கொற்றக்குடைகள் வாங்க
       உருத்திகனும் மறலியுடை வாள்கையேந்த
       பொலன்நிதி சேர்குபேரனடைப்பையைக்கொள்ள
       பெருத்தகடல் அரசன் பொற்படிக மேந்தப்
       பேரிதவில் வீணை சின்னம் பொலிந்து ஓங்க
       அருத்திகளுமறு முகத்தான் புதுக்குளத்தில்
       அருள் கந்தசாமி மகிழ்ந்தாடீரூஞ்சல்.

4.    கயமுகத்து வினாயகர்முன் கருணை நீடக்
       கந்தருவர் கருடர் சித்தர் கவிகள் பாட
       வயமிகு நல்லந்தணர் நான்மறைகள் தேட
       வந்தனை செய் யன்பரடி முடியிற் சூட
       நய மருவுமவள்ளி தெய்வயானை கூட
       நற்புலவர் மாதவர் நாவலர்கள் நாட
       அயல் நிறையும் மறுமுகத்தான்புதுக்குளத்தில்
       அருள் கந்தசாமி மகிழ்ந்தாடீரூஞ்சல்.


5.     மெய்யடி யாரனவி ரதம் விரும்பிப் போற்ற
       மேலுல கோர் கற்பகப் பொன்மலர்கள் தூற்ற
       எய்தினர்களின் புறநற் கருணை யூற்ற
       எங்கெங்குமுற்றவன் பரிடர்கள் மாற்ற
       வெய்ய கொடும் பவமகல வினைகளேக
       மேலோங்கச் சிலசமையம் மிடிகள் போக
       அய்ய மிலாவறுமுகத்தான் புதுக்குளத்தில்
       அருள் கந்தசாமி மகிழ்ந்தாடீரூஞ்சல்.


6.    வெறிகுலவுஞ் சுரும்பி மிருந்தேமா நாவல்
       வில்வை கொன்றை முல்லை மகிழ் வெள்ளிலாருஞ்
       செறியு மலர்க் காவுடனே தருவுந் தாவத்
       தும்பிமுகத் தெந்தை துணையாக மேவ
       சிறியவரும் பெரியவருந் தெரிவை மாருந்
       தினந்தினமும் வந்து தொண்டுசெய்து போற்ற
       அரிவரிதாய் யறுமுகத்தான் புதுக்குளத்தில்
       அருள் கந்தசாமி மகிழ்ந்தாடீரூஞ்சல்.

 7   மணியணீயுமுரபுயனே வடிவேற் கந்தா                      
      மங்கையர்கள் மாயவலைப்பட்டு வாடித்  
       தணிவிலாப் பவம் புரிந்து சலித்து நோயாற்
       சஞ்சலங்களிடைப் பட்டுத் தளர்ந்துன் பாதம்
       பணியவந் தோற்கருள் புரிந்துன்னடிய னாக்கிப்
       பந்தபாசந்தவிர்த்துப் பரிந்தே யாழ்வாய்
       அணியணியாய் மனைகுலவும் புதுக்குளத்தில்
       அருள் கந்தசாமி மகிழ்ந்தாடீரூஞ்சல்.

8     இரு வினையும் மும்மலமு மிறுகப் புல்லி
      இருந்த புளுவீடு தனைத் திளைத் தென்னாளும்
       பொருளிழந்து மழகிழந்தும் பொலிவிழந்து
       புகழிழந்து பொன்றிடுமிக் காயம்போனால்
       வருவேனே நினதடியற் கடியனாக
       வாரேனே வறிகிலே னறிவில்லே நல்
       உருவுடனே யறுமுகத்தான் புதுக்குளத்தில்
       உறை கந்தசாமி யுகந்தாடீரூஞ்சல்.

 9.   கூறுமயில் வாகனரே யாடீரூஞ்சல்
       குறக் கொடிதன்னாயகரே யாடீரூஞ்சல்
       தேறுகங்கை பாலகரே யாடீரூஞ்சல்
       தெய்வானை மணாளரே யாடீரூஞ்சல்
       நாறுகடம் பணிகுகனே யாடீரூஞ்சல்
       நக்கீரற் கருள்குருவே யாடீரூஞ்சல்
      ஆறுமுகமடைய வரும் புதுக்குளத்தில்
      அருள் கந்தசாமிமகிழ்ந் தாடீரூஞ்சல்.

 10.  திறம் புனைவேதாக மநூல் கலையும்வாழி
       செங்கோல் நன்நீதி பசுதிகழ்ந்து வாழி
       பிறங்கி வருமுகில்கள் மழை பொழிந்து வாழி
       பெருகு மயிற் பெண்கள் கற்பு மறமும் வாழி
       மறந்த விரும் வள்ளிதெய்வமாதும் வாழி
       மான்முதல் வானவர் சேவல் மயில்வேல் வாழி
      அறங் குலவும் புதுக்குளமாலயமும் வாழி
       யாழ் கந்தசாமி யருளாக வாழி.                    
                                                                            
                                               முற்றிற்று              

                                                
                 
                                      “எச்சரீக்கை”
                   சீரார் திருக்கு மரா சிவகுருவே எச்சரீக்கை
                  திகளும்; புதுக்குள நற்பதித் திருவே எச்சரீக்கை
                  கூரார் வடிவேலாயுதக் குகனே எச்சரீக்கை
                  கோலமயிலேறி வரும் குமரா எச்சரீக்கை
                  வாரார் கடம் பணியும் சரவணனே எச்சரீக்கை
                  வள்ளி தெய்வானை மணவாளா எச்சரீக்கை
                  காரார் வினைதீர்க்குமருட் கடலே எச்சரீக்கை
                  கருதும் புதுக்குளத்திற் கந்தசாமி எச்சரீக்கை.

                                             “பராக்கு”
                  கூறு மயிலேறி வருங்குகனே பராக்கு
                  கொடிய வினை நீக்குமருட்குமரா பராக்கு
                  மாபடு சூரனை வதைத்தாய் பராக்கு
                  வள்ளியை மணம் புரியும்வரதா பராக்கு
                  தேறுமடியா ரொடெமைச்சேர்ப்பாய் பராக்கு
                  சித்தியொடு முத்தி தருஞ்செல்வா பராக்கு
                  ஆறுமுகமாகி யருளையா பராக்கு
                  அன்பருறு புதுக்குளத் தமர்ந்தாய் பராக்கு.
                            

                                       “மங்களம்”;
மங்களம் மங்களம் சுபசெய மங்களம்- மங்களம்
செங்கை வடிவேலவற்கும் கங்கை வருபாலகற்கும்
இங்கிதகுணாளருக்கும் மங்கைகள் மணாளருக்கும்-மங்களம்
செந்திப் பதிக்கந்தனுக்கும் மிந்தப்பதி சேந்தனுக்கும்
தொந்தி வயிற்றைந்து கரத்தந்திமுகன் பிந்தினற்கும்-மங்களம்
வள்ளி தெய்வ மாதினுக்கும் புள்ளிமயில் சேவலுக்கும்
தௌ;ளுதமிழ்ப் பாவலற்கு உள்ளமகிழ்வாக நிதம்-மங்களம்.
.மங்களம்! மங்களம்! மங்களம்! மங்களம்! மங்களம்.   






                                                              
    நொச்சிக்குளம் திரு சி. முருகையா அவர்கள்

          ஓமந்தை ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமிகோவில் 
                                          முருகன் மேற்பாடிய               
                                                     பாமாலை

                                          கணபதி துணை

கந்தனுக்கு முன் பிறந்த கணபதியே தாள் பணிந்தேன்
உன்தம்பி உன்னோடு உறைந்திருக்கும் தலமதையே
பந்தமுடன் பாரறியப் பாடலொன்று பாடுதற்குச்
சிந்தையிலே வீற்றிருந்து சீருடனே சிறப்பியுமே. 

                                           சரஸ்வதி துதி

நற்றமிழின் தாயே நல்வாக்கினிருப்பிடமே
நற்றவமியற்றிலேன் நல்லவனும் நானல்லேன்
குற்றமின்றி நாவில் குடியிருந்து வீணையுடன்
வீற்றிருக்கும் தாயே வாணியே யருள்புரிவாய். 

                                              அவையடக்கம்

சந்தங்கள்தானறியேன் சதுர்மறையும் நானறியேன்
பங்கமிலாப் பாட்டெழுதப் பாட்டின் வகைதானறியேன்
சிந்தையிலேயுதித்தவற்றைச் சித்தரிக்கும் முறையறியேன்
எந்தைபோல் நீரிருந்து எடுத்தியம்பும் குறையிருப்பின். 

                                      நாட்டின் சிறப்புக் கூறல்

1. பார் புகழும் பாரதத்தின் தென்கோடிக் கடல் நாப்பண்
  கார்வண்ணன் கால் பதித்தே கயல்விழியைச் சிறை மீட்டான்
  மார்பிலணி மாணிக்கம் மலை வளமாய்க் கொண்டிட்ட
  ஈரேழுலகமும் இலங்கைக்கிணை யிலையே.

2. இலங்கும் நன் முத்தென்ன இந்துமகா சமுத்திரத்தில்
  இலங்கையெனப் பெயர் கொண்ட ஈழவள நன்நாடு
  கலங்கரை விளக்கெனவே கடல் நடுவே தீபகற்பம்
  துலங்கும் தமிழ் வழங்கும் தூய்மைமிகு நாடாகும்.

3. தலங்கள் பலவுண்டிங்கு தக்குணத்தில் கதிர்காமம்
  நலங்கள் பல நல்கும் நல்லூரான் வடதிசையில்
  இலங்கையர்கோன் ஏத்தி நின்ற கோணேஸ்வரம் கீழ்த்திசையில்
  கலக்கமின்றி வழிபடவே கேதீச்சரமாம் குடதிசையில்.

4. சொல்லச் சந்நிதிகள் பலப்பலவே முன்னேஸ்வரம் முதல்வனவன்
  செல்வச் சந்நிதி முருகனுக்கே மாவிட்டபுரம் கந்தனுக்கே
  நல்லசந்நிதி நகுலேசற்குக் கீரிமலைக் கேணியடி
  வல்லதொரு சக்தியடி தெல்லிப்பளைத் துர்க்கையம்மன்.

5. எத்தனை கோவிலடி எங்கள் கந்தசுவாமிக்குத்தான்
  இத்தனையுமிருந்துமவன் இசைந்திருந்தான் புதுக்குளத்தில்
  அத்தனையுமவனருளே ஆலயத்தின் மகிமையடி
  சித்தமெலாமொரு நிலையில் சேவித்தே நின்றிடுவோம்.

6. நாட்டினிலே வடதிசையில் நல்ல செந்தமிழ் விளங்கும்
  காட்டிலும் களனியிலும் கவிபாடும் குயில் கூவும்
  வாட்டமின்றிப் பயிர் வளரும் வன்னியெனும் வளப்பதியில் 

  நட்டநடுவேதான் நாம்வாழும் பதிவிளங்கும்

7. வன்னிக்கே மாநகரம் வவுனியாவின் வடபாலில்
  நன்நீர் நிறைகுளங்கள் நகரங்கள் பலவுண்டாம்
  பன்னீர் மரங்களுடன் பசும்சோலை வனங்களுமே
  மன்னரும் மகிழ்ந்;திருந்த மலர்க்காவும் பலவுண்டாம்.

8. பிரணவத்தின் பெயர் கொண்டு பொலிவு பெறும் ஓமந்தை
  பரமனவன் புகழ்பாடும் பன்றிக்கெய்தகுளம்
  மரணபயம் மாற்றி நிற்கும் மரையடித்தகுளம் சேர்ந்தால்
  சரவணன் சந்நிதியாம் அறுமுகத்தான்புதுக்குளமே.

                                                 தலச்சிறப்பு

9. குடத்திலேயணியணியாய்க் குடிமனை சேர்சாலை
  வடத்திலே நெல்மணி வயல்களொடு வனச்சோலை
  மடத்தொடு குருமனையும் தென்புறத்தொருசாலை
  படத்தோடு வருபாம்பனைய கதிரவனார் கிழக்கே காலை.

10. அயலூர்கள் பலவென்றே அழைப்பதற்கு நாமிங்கே
   வயல்கள் பலவுடைத்தாய் ஆத்திமோட்டையருகாக
   கயல்பிறழும் களனிகள் சூழ் மாளிகையாம் நன்நகரும்
   புயல்தனையும் பொருதிநிற்கும் புதுமைமிகு நொச்சிக்குளம்.

11. அலைகல்லுக்குளத்தருகே குலமகளுக்கொரு கோவில்
   கலைமகளின் புகழ்பாடும் கலையரங்கம் சேமமடு
   மலைமகளின் முதல் மகனாம் வினாயகர் புரத்தோடு
   தலை நிமிர்ந்து மயிலாடும்  பெரியபுளியங்குளமே

12. இத்தனையூர் மத்தியிலே அமைந்ததுமே இத்தலமே
   சித்தற்கும் பக்தற்கும் சிறப்பாகும் அவனருளே
   சித்தமது தெளிவுறவே திருக்காட்சிதருதலமே   

   பற்றினால் அவன்பாதம் பெற்றிடலாம் பெருவரமே.
                                            

                                              தலவரலாறு
 

13. ஞானசக்தி வடிவுகொண்டே மூலத்தின் கொலுவிருப்பார்
   வானவர் கோன்தன் மகளை வரித்திட்ட மன்னவனே
   தானதர்மம் தளைத்தோங்கத் தன்னடியார்க்கருள்பவனே
   கானகத்துக் குறமாதைக் கைப்பிடித்த கந்தவேளே.

14. பிறர்படை எடுப்பினாலோ பெரும்பிணி அழிப்பினாலோ      
   நிறைவயல் குளங்கள் சூழ்ந்தநிலமெலாம் காடுமண்ட       
   குறைவிலா வன்னிமண்ணில் குடிகளும் அருகிப்போக     
   இறை வழிபாட்டிடங்கள் எங்கெங்கும் அழி
ந்தவன்றே.      

15. அழிந்ததோர் முருகன்கோவில் அறுமுகத்தான்புதுக்குளத்தில்   
   மிளிர்ந்ததோர் பொற்காலத்தில் மேன்மையுற் றிருந்தவன்றே      
   கழிந்ததோர் சரித்திரத்து முற்பட்ட காலந்தன்னில்
   ஒளிர்ந்ததன் சாட்சியாக உடைகுளம் அனேகமாமே.

16. எண்ணிய எண்ணம் யாவும் எளிதினிலடையச் செய்யும்
   கண்ணிலுமினியானெங்கள் கருத்தை விட்டகலாத் தெய்வம்
   பன்னெடுங்காலமாயிப் பதியினில் நம் முன்னோர்கள்
   பண்ணிய பூசனையால் அருள் பாலித்
திருந்ததன்றே.

17. பண்டைய பொலிவெல்லாம் பாழடையப் பலகால்
   மண்டபமும் மதிற்சுவரும் மண் மேடாய்ப் போயினவே
   வண்டார் சோலைகளும் வனமாக மாறியங்கே
   கண்டவைகள் கற்றூணும் நந்தி பலிபீடமுமே.

18. மரையடித்தகுளத்தில் வாழ்ந்த 
   மதிப்புறு தம்பதி சின்னத்தம்பி பொன்னம்மாதன்
   கறைபடியா உளத்தினில்
   களிப்புறத் தலை மகனாய் அவதரித்து
   மறைபுகழ் மன்னவன்தன்
   மனமகிழ் மடிதவழ் மதலைதன்னை
   இறையென ஏத்திடும் ஏந்தலாய்
   சின்னையாவென சீரிய நாமம் வைத்தார்.

19. தன்வினையாற் கல்விஉயர்வு பெற்றும்
   தாரணியிலாசிரிய பதவி பெற்றும்
   கன்ம வினையால் கடுகி வந்துற்ற பிணி
   காசமதாலவதியுற்றுச்
   சென்மமிதைக் கடைத்தேற்றச்
   செல்வச்சந்நிதி சேர்ந்திருக்க
   அன்றோர் அல்லில் கண்ட கனவால்
   அதிசயித்தே கண் விழித்தார்.
 

20. உன்ஊரின் அயலூரில் ஆரண்ய நடுவே நானிருந்தும்
   என்னருகேயமையலின்றி ஏறெடுத்தும் பாராதே இங்குற்றாய்
   கன்னல் களனிகள்சூழ் புதுக்குளத்தில் கண்டிடுவாய் 
   என்னுமசரீரியால் கந்தனுருக்காண இங்கு வந்தனரே.


21. சிதைந்திட்ட நிலைகண்ட சின்னையாவெனுமாசான்
   பதைபதைத்து நின்றவரும் பாங்குடனே அமைக்கவெண்ணி
   அழைத்துமேயன்பர்தம்மை ஆலோசித்துத் திட்டமிட்டு                            
   
உழைத்துமேயாக்கம் கொள்ள உறுதொழில் பலவும்தானே.

22. மரையடித்த குளத்தினிலும் மருங்குற்ற ஊர்களிலும்      
   நிறைவோடு வாழ்ந்திருந்த பெரியோர்தமையும் கூட்டி  
   விரைவாக நிர்வாக சபையையும் ஒன்றமைத்து   
   நிரையாக வேலைகளை நிறைவேற்றத் திட்டமிட்டார்.  

23. இருபதாம் நூற்றாண்டு இனியதொரு ஜயவருடச் சித்திரையில்
   வரு திருநாள் ஒரு பெருநாள் முத்திதரு முழுமதி நாள்
   அருள் திகழும் ஆலயத்தை அமைத்திடவே எம்இறையின் 
   திருவருளும் பொன்பொருளும் தினமதிலே கைகூடிவந்ததம்மா.

24. கருவறையோடர்த்தம் தரிசனம் கண்டிடும் மண்டபங்கள் 
   திருநிறைசேர் நந்தியாக மயிரமொடு பலிபீட மகாமண்டபமும் 
   இருபுறமும் சந்நிதிகள் இருவினைதீர் வினாயகரும் வைரவரும் 
   கருதியே கட்டினார்காண் சாவகச்சேரிக் கொத்தனார்கள். 

25. கானமிசைத்தொலிக்கும் காண்டாமணிக்கோபுரமும் பாங்காய் 
   வானத்துமுகிற் கூட்டம் வந்து தங்க அமைத்திட்டார்
   ஆனவிதானங்கள் நான்கினும் கலசங்கள் அழகாக ஓளிர்;ந்ததால்
   கானகத்து மயிலினங்கள் களித்துமே நடமாடிநிற்கும்.

26. கனகராயன்குளம் வாழ்ந்த கற்பரசி பார்வதியம்மை 
   மனமாரத் தந்திட்ட மதிக்கவொண்ணா நிதிதானே 
   உளமாரச் செய்திட்ட உகந்த பணி மென்மேலும்
   வளமாகப் பயன்பட்ட வகையொன்றும் மறைந்திடாதே. 

27. வேலனின் கூத்துஎன்று விளம்பிடும் கார்த்திகேசு   
   சூழவேயுள்ள தூரவன்னியின் கிராமம் எல்லாம்    
   சாலவேசென்று கந்தன் திருப்பணிநிதி கொணர்ந்தார்  
   காலங்கள் கரைந்திட்டாலும் கருமங்கள் மறக்கொணாதே.  

28. தொடங்கிய பணியும் நன்றே தொடர்ந்ததால் ஜெயமாகி 
   தடங்கலின்றி நிறைவுற்றுத் தக்கதொரு சுப கிருதில்
   புடம் போட்ட பொன்னாகிப் புணராவர்த்தனத்துக் 
   குடமுழுக்குக் கண்டதம்மா கடம்பமணிக் கந்தன் மனை.

29. ஆவணித்திங்களதன் சுக்கிலத்தில் சஷ்டியிலே அறுமுகனும் 
   பவனிவரும் அலங்காரப் பத்துநாள் உற்சவமும் பக்தர்களின் 
   காவடிக்கரகங்கள் காவலாய் ஆடிவர முழுமதிநாள் 
   அவனிக்கு அருள் புரிய அழகாகத் தீர்த்தம் அழகன் ஆடிடுவார். 

30. கண்ணிரண்டும் போதாவே கடம்பனவன் வீதியுலாக் காணுதற்கு 
   தன்னிரண்டு துணைவியரோடும் தோகையின்மேல் அலங்கரித்தே 
   பண்ணிசைத்துப்பாடி வரும் பக்தர்குழாமோடு வேழமுகத் 
   தண்ணனுமே அருகில்வர அசைந்துவரும் பாங்கென்னே. 

                                                தலவிசேடம்

31. ஆலயத்து வீதியினிலே அமைந்ததோர் ஆழ் கிணற்றில் 
   குலமகளொருத்தியும் தன்தங்கையுடன் தண்ணீரைக் 
   காலையிலே கடுகிவந்து கொண்டிடவே கணப்போதில் 
   நிலைதடுமாறியே அவளும் நீரில் வீழ்ந்து மூழ்கினளே. 

32. அருகாகக் காத்திருந்த அவள் தங்கை அதிர்ந்தும் பழக்கத்தால் 
   முருகா முருகா அக்கா கிணத்துக்கை என்றென்றே ஓலமிட 
   ஊர்மக்கள் ஓடிவர ஓரிளைஞன் கரை சேர்கக் கண்ணுற்றார் 
   யாரெவரென்றே அறியுமுன்னே அருவமாய் மறைந்தனனே. 

33. வந்துதவி புரிந்ததுவும் வானிலே மறைந்ததுவும் உண்மையிது 
   கந்தனவன் கருணையென்று கருதியே மெய் சிலிர்த்தார்
   கந்தா கடம்பா கதிர்வேலா என்றழைத்துக் கைகூப்பி 
   வந்தனைகள் செய்து நின்றார் வள்ளி மணாளன் தாளினையே.

34. தள்ளாடித் தள்ளாடித் தளர்ந்துவிட்ட கால்களொடு இங்கு வந்து 
    மௌள மௌள பூசனைகள் செய்திட்ட இளைஞரான பூசகரின் 
    கள்ளமிலா இதயமதில் கலந்துவிட்ட கந்தனவனருளால்
    தௌளெனவே வேதனையும் தீர்ந்ததுவே ஒருமாதம் முடியுமுன்னே. 

35. ஆலயத்துவீதியிலே அடாது செய்த அன்பர் சிலரும் தம் 
   காலழுகிக் கைமுறிந்து காடு செல்ல நேர்கையிலே 
   காலமதில் கைகொடுத்துக் கடும்பணிகள் செய்தேத்தக் 
   காலனவன் கைபடாது காத்துநின்றார் எம்கந்தன். 

36. இன்சுவைசேர் இருவாவி இத்தலத்துத் தீர்த்தங்கள்
   முன்பின்னாயிருபுறமும்; நிறைந்தே மாந்தர்பிணி நீக்கிடுமே 
   மன்னவனின் மனங்கவரும் மலர்க்கடம்ப வனச்சோலை 
   அந்நிலைக் கரை முழுதும் அடர்ந்தோங்கி வளர்ந்து நிற்கும.; 

37. வடபுறத்து மதிலோரம் வளமாக உயர்ந்து நிற்கும் 
   கடம்பனவன் கருதுகின்ற வில்வமது தல விருட்சம்  
   புடம் போட்ட பொன்போலப் பசுந்தளிராம் வில்வதளம் 
   தடங்கலின்றி அர்ச்சனைக்குத் திடமாகக் கிடைத்திடுமே. 

38  மாறுபடு சூரனுடல் கூறுபட வேல்விடுத்த
    ஆறுமுகத்தான் புதுக்குளத்து அழகேசன்புகழ் பாடி 
    நறுமலரும் வில்வமும் நல்லதொரு கடம்பும் தூவி 
    மறுபிறவி பெற்றிடினும் அருள் பெற்று வாழ்ந்திடுவோம். 

39. நறுமண மலரும் நீயே நலந்தருவடிவும் நீயே 
   உறுபுனல் நிதியும்நீயே ஒளிவிடு சுடரும் நீயே
   அறுத்திட வந்தாய் நீயே எந்தன் வல்வினையெல்லாம் நீயே
   அறுமுகத்தான்புதுக்குளத்தில் அருள்தரவந்தாய் நீயே. 

40. அகவிருள் நீக்கியேயெனக் அறிவொளி தருவாய் போற்றி 
   பகரொணாக் கருணை வாரிதியே பரமனின் புதல்வா போற்றி 
   அகந்தையையழித்தே என்னையாட்கொண்டருள்வாய் போற்றி 
   சகத்துளோர் ஏத்தி நிற்கும் சண்முகா போற்றி போற்றி. 

41. நான் மறை நாயகனும் வாழ்க நாயகியாமன்னையுமையும் வாழ்க  
   காண்பரிய கரிமுகனும் வாழ்க கலியுக வரதனும் வாழ்க 
   மாண்புடையரியும் வாழ்க மலரவனும் துணைவியரும் வாழ்க 
   வான்புகழ்சேர் இப்பதியில் வணங்கிடுமடியார் வாழ்க வாழ்க. 

                                                                முற்றும்