ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமிகோவில் நவகுண்டபகூp பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்திவிழா 31-08-2011 பிரதிஷ்டா பிரதமகுரு சிவப்பிரமஸ்ரீ வை.மு.பரம.சண்முகராஷசிவாச்சாரியார்.

கவிதைகள்

எமது கிராமத்திதுள்ள பெரியோர்கள் கூறும் அறிவுள்ள உப கதைகள்
கவிதைகளாகத் தரப்பட்டுள்ளன.
                               மேய்ப்போன் 
மன்னு புகழ் தமிழ் நாட்டின் முன்னோர் காலம்
வண்மை மிகு சிற்றரசாம் பகுதி ஒன்றில்
பண்பறிவு கலைகளிலே சிறந்த மன்னன்
அன்புடனே அந்நிலத்தை ஆண்டு வந்தான்

வள்ளலவன் முன் செய்த பாய்கியத்தால்
நல்லழகு கொண்ட பெண் குழந்தை பெற்றான்
பிள்ளையவள் வளர்ந்து கல்விப் பேறும் பெற்று
பல்கலையும் பயின்றொப்பார் இல்லாரானாள்

பேதை பருவமதை பெண்ணவள் எடடியதால்
தாதையும் தன் மகட்கு தாம்பத்தியம் செய்வதற்கு
கோதையவளை அழைத்து கொண்ட தன் எண்ணத்தை
பேதையவளுக்குப் பிரியமுடன் கூறி வைத்தான்

எல்லோரும் கூறுதல் போல் இன் மகளும் கூறாமல்
வல்லவளாய் தான் வளர்ந்த வன்மைக்குத் தக்கபடி
சொல்லும் தன் நிபந்தனைக்குச் சுற்றங்கள் சம்மதித்தால்
நல் மனதாய் சம்மதிப்பேன் நன் மணத்தைச் செய்திடவே

என்ன நிபந்தனைதான் என்றே தந்தை
அன்புடனே வினவ அந்த அறிவு மங்கை
தன்னை மணக்க வரும் மணாளன்தன்னைப்
பண்புடனே மூன்று வினா கேட்பேன் என்றாள்

மூன்று வினா முத்திரையின் செய்கையாலே
ஆன்றோர்கள் ஆக்கி வைத்த அரிய நூலின்
சான்றாகப் பரதத்தில் கூறியுள்ள
ஒன்றான உருவகத்தால் கேட்பேன் எனறாள்

சரியான விடையை அவன் சைகையாலே
விரிவான முறையினிலே விளம்பி விட்டால்
பரிவுடனே பதில் உரைக்கும் இளைஞன்தன்னை
பதியாக ஏற்றிடுவேன் என்றே சொன்னாள்

மந்திரிகள் படைத் தலைவர் தம்மைக் கூட்டி
வந்துள்ள பிரதானிகளையும் கூட்டி
தந்தையாம் அரசர்தம் கருத்தும் சேர்த்து
மங்கை மகள்நிபந்தனையும் மதித்துரைத்தான்

பிரதான மந்திppரியும் பெரியோர்தாமும்
வரனாக வரத்தக்க அறிஞன்தன்னை
விரைவாகத் தம்மாலே இயன்றமட்டும்
திரை கடல் சூழ் புவி யாவும் தேடலானார்

அழகுடைய அரசமைந்தர் அரிபோல் வீரர்
பழகுவதில் பண்புடையோர் பாவில் வல்லோர்
இளமை மிகு எழிலுடையோர் இயல்பாய் கல்வி
அளவிலா அறிவுடையோர் அடுக்கில் வந்தார்

மன்றிலே வந்து நிற்பாள் மங்கை நல்லாள்
ஒன்றாக நோக்கி இளவரசர்தம்மை
மூன்று விரல்களினை முகத்தின் நேராய்
நன்றாகக் காட்டி நிற்பாள் நடன சாயல்

சால்பான இள மைந்தர் சற்றும் தேரார்
பால் வடியும் முகத்தினராய் பண்பாய் நீங்கி
வேல் போன்ற கண்ணுடையாள் வித்தைதன்னை
மேலாக நினைந்திடத்தை விட்டுச் செல்வார்

இப்படியாய் எத்தனையோ இளைஞர்தாமும்
தப்படியாய் திரும்பிய அத் தன்மை கண்டு
எப்படியும் தன் மகட்கு ஏற்ற மைந்தன்
மேற்படியும் அழைத்திடுவீர் என்றான் வேந்தன்

சலிப்படைந்த மந்திரியும் சார்பினோரும்
பலித்திடவே தம் பணிகள் பாட்டில் சென்று
நலிந்திட்ட யார் எனினும் கொணர்தல் எண்ணி
மலிந்திட்ட மாப்பிள்ளையாய் பார்க்கலுற்றார்

புல் வெளிகள் நிறைந்திட்ட காட்டினோரம்
புயல் போலக் குதிரைகளை ஓட்டும் நேரம்
வலலவன் போல் தோன்றிட்ட இளைஞன்தானும்
கொல்லையிலே மூன்றாடு மேய்த்தல் கண்டார்

இளைஞனவன்தனை அழைத்து இன் நீராட்டி
எழிலான அரசுடைகள் இலங்கு பூண்கள்
அழகாக அணிவித்து அரசன் முன்னே
வளமாக அழைத்தருகில் இருத்தி வைத்தார்

கார் குழலாள் முன் வந்து கருத்தால் கொண்ட
பார் போற்றும் பரதத்தின் முத்திரையை
சார்பான வலக் கையின் விரல்கள் மூன்றால்
நேர் இருக்கும் இளைஞன் முன் நீட்டி நின்றாள்

இடையனுமோ எண்ணமிட்டான் என்ன ஆகும்
உடைய எந்தன் மூன்றாடு முழுதும் கேட்டால்
குட்டியையும் தாயையும் கொடுக்க எண்ணி
திட்டமிட்டு இரு விரலைக் காட்டி நின்றான்

மங்கை மனம் மகிழ்ந்தாள் அறிஞனென்று
மறுபடியும் இரு விரலைக் காட்டி நின்றான்
திட்டம தாய் கேட்கின்றாள் ஆதலாலே
சிந்தித்துப் பதில் உரைக்க எண்ணி நின்றான்

குட்டியையும் தாயையும் கொடுத்து விட்டால்
குடி முழுகிப் போகாதோ ஆட்டு மந்தை
வட்டியைப் போல் பெருகுமே மறியைத்தானும்
குட்டியையும் வைத்திருக்க எண்ணமிட்டான்

நேராக மங்கையின் முகத்தை  நோ க்கி
ஓர் ஆடுதான் தன்னால் தரலாம் என்று
சார்பான சுட்டு விரல் தன்னால் காட்டி
பேர் போன குமாரியினைப் பார்த்து நின்றான்

மறை போற்றும் ஒருவனையே உணர்ததால்தான்
நிறைவான பதில்தனையே தந்தான் என்று
மறு படியும் ஒரு விரலைக் காட்டிக் கேட்க
உறுதியதாய் இடையனும்தான் ஒன்றை நேர்ந்தான்

அளவிறந்த களிப்புடனே அரச மங்கை
இளவரசன்தனை மணக்க இசைந்த செய்கை
கழுத்தசைப்பால் காட்டி விட்டு கடிதில் நீங்கி
அழுத்தமதாய் அறிஞனென்று எண்ணம் கொண்டாள்;

மூன்று விரல் காட்டுதலால் பிரபஞ்சந்தான்
மும் மூர்த்தி விதியுடனே விஷ்ணுவோடு
உருத்திரனும் கூடியதால் நடப்பதாமோ
விருப்போடு விடையதனைக் கேட்டாள் மாது

இருவிரலைக் காட்டியதால் இயற்கைதானும்
திருவான சிவம் சக்தி சேர்தலாலே
கருவான பிரபஞ்சம் உணர்ந்தான் என்றும்
ஒரு விரலால் உணர்த்தியதும் உணர்ந்தாள் மாது

உலகதனில் தெய்வமொன்றே என்ற அந்த
உண்மைதனை  அறிந்த இவன் அறிஞன்தானே
வண்மையுடை அறிஞனவன் தனக்கு ஏற்ற
மணாளன்தான் என்றெண்ணி மகிழ்ந்தாள்மாது

திருமணமும் நடந்தேறித் திரு மஞ்சத்தில்
வரு களைப்பால் அயர்ந்திட்ட மணாளன்தன்னை
தீர்த்தமதைத் தெளித்தெழுப்ப எண்ணமிட்டு
நீர்; கரத்தில் சிறிதேந்தி நீவி விட்டாள்

சீச்சீ! சீ இந்தாடு இப்படித்தான்
எப்பொழுதும் என் மேல்தான் சிறுநீர் பெய்யும்
கொன்றிடுவேன் அப்பால் போ! என்றுளம்பி
மறுபுறமாய் திரும்பி மஞ்சில் அயர்வு கொண்டான்

என்ன இது ஏமாற்றம் புரியவில்லை
எதுவுமே என்றெண்ணித் தட்டில் பூக்கள்
பதுமையாய் சிறிதள்ளி அவன் மேல் போட
பதைப்புடனே சத்தமிட்டுப் புசத்திக் கொண்டான்

கிடாயாடு இப்படித்தான் கிடக்கும் போது
இடாக்காக என்மேல்தான் பிழுக்கை போடும்
அப்பாலே போ! போ! சீ அறுந்த ஆடே
இப்போது தூங்க விடு என்னைக் கொஞ்சம்

ஏமாந்த நிலமைதனை உணர்து கொண்டு
இறுமாந்த அறிவாலே சிதைந்து போன
அருமந்த வாழ்வுதனை முடிக்க எண்ணி
சிரம் கொண்டாள் கொலை வாளைக் கரத்திலேந்தி

காளி கோவிலின் முன்னே நின்று கொண்டு
கதறியழுதழுதோய்ந்து கொலை வாளை மார்பில்
வெறியுடனே பாச்சுதற்கு ஓங்கும்போது
விந்தையுடன் அசரீரி ஒலித்ததங்கே

பொறு மகளே! அறிவுள்ள புகழின் மங்காய்!
அறிவுடையோன் உன் கணவன் என் போல் மேய்ப்போன்
ஆடுகள் போல் அலைந்திருக்கும் மனிதர் தம்மை
பாடுகளால்  உலையாமல்  பரத்தைச் சிந்தி!

மன்னுயிற்காய் தன்னுயிரைத் துறப்பானாகில்
மாண்பு மிகு மகிமை உண்டு மண்ணின் மீதே
தாழ்வுளத்தால் தன்னுயிரைத் துறப்பானாகில்
தாழ்ச்சியுண்டு தாரணி நிலைக்கு மட்டும்

ஆதலினால் அறிவுள்ள அழகின் நங்காய்!
பேதலித்து மயங்காது பிறர்க்காய் வாழ்வாய்
சாதலது பிறந்தோர்க்குத் தவிர்க்க முடியாது
நீதியதுணர்த்துகின்ற நெறி முறையில் வாழ்வாய்

அறிவாற்றல் வளர்த்திடுதல் அகங்காரம் தேய்க்க
செறிவாகச் சிந்தித்தல் தீமைகள் விலக்க
நெறி பற்றி வாழ்ந்திடுதல் நின்மதியைத் தேட
பொறியடக்கித் தியானித்தல் பொய்மைகளைப் போக்க

அகங்காரம் கொண்டறிவு அவமதிப்பைத் தேடும்
செகந்தனிலே ஆணவம்தான் தீமைகளைச் சேர்க்கும்
அகம்தனிலே  நிரந்தரமாய் அன்பினைப் பெருக்கு
நிதம் நினது சிந்தனையை நெறி வளிநடத்து

குறையின்றி வாழ ஒரு நீதி முறை சொன்னேன்
முறைபற்றி ஒழுக இந்த முது கதை உரைத்தேன்
பொறையோடு இக்கதையின் பொருளினையுணர்ந்து
மறை போற்றும் ஒருவனது மலரடியிற் சேர்வீர்;!
 
                      பொ.தர்மகுலசிங்கம்


கர்வத்தை நீக்கிக் கருமத்தைப் பேணு!
ஐந்து விரல்களையோர் அரும் பெரும் தத்துவமாய்
விந்தையாய் நினைந்து விளங்கு நற் கவியாகப்
பைந் தமிழிற் புனைவதற்குப் பண்பாய் கலை மகளை
சிந்தையில் நினைந்து சிறப்பாய் துதி செய்வாம்;

உண்பதற்கும் உடுப்பதற்கும் உதவி பல புரிவதற்கும்
இன்னும் பல முயற்சி எளிதாகச் செய்வதற்கும்
ஒன்றாய் இயங்கி நன்றாய் உழைத்து வந்த
சிற்சிறு விரல்கள் ஐந்துள் சிறு பிரிவு வந்ததங்கே

விரவிடு தற் பெருமை கொண்ட விரல்கள் ஐந்தும் தம்முள்ளே
சரசமுடன்தாமிருந்த தன்மையினையே மறந்து
விரசமுடன் தம்மிடையே வேறு பட்டு நின்று கொண்டு
தரம் தரமாய்த் தம் பெருமை சார உரைத்தனவே

கட்டையுமாய் தடித்ததுமாய் கனமதிகமுடையதுமாய்
வீற்றிருக்கும் பெரு விரலோ வீராப்புடன் எழுந்து
அசட்டையாய் நோக்கி அடுத்த விரல் நான்கினையும்
ஏற்றமிகு தன் பெருமை எடுத்தினிது இயம்பியதே

ஓர் பொருளைப் பற்றிடவோ சார்பாகப் போவதற்கோ
வீறு கொண்ட நான் தனித்தே வேகமாய் போகின்றேன்
கூறு கொண்ட நீவிரோ எனக்குச் சமமாகப்
பாதிப் பங்கைப் பற்றப் படை திரண்டு போகின்றீர்

என்றார்ப்பரித்து இடியிடி என்று சிரித்துத்
தன் பெருமை சாற்றித் தலை நிமிர்ந்து நின்றிருந்த
பெரிய விரலினையும் பின் உள்ள மூன்றினையும்
சுட்டு விரல் பார்த்துச் சொற் பொழிவு ஆற்றியதே

எந்த ஒரு பொருளை எளிதாகக் காட்டுதற்கும்
பைந் தமிழை இலகுவாய் பாலற்குப் பயிற்றுதற்கும்
சிந்தை கொண்டு நான் தனித்துச் சிறப்பாகச் செல்கையிலே
விந்தையாய் நீவிர் எல்லாம் விரைந்தொழிப்பதேனோ?

அன்றியும் நீவிர் அசல் பயந்தாங் கொள்ளிகள்தான்
என்று இன்னோர் சான்று எடுத்து நான் காட்டுகின்றேன்
மின்னி இடிப்பது போல் வீராப்புப் பேசி வரும்
சின்னவரைக் கண்டாலும் சீக்கிரம் நீர் ஒழித்திடுவீர்;

நான்தானே  முன்நின்று நன்றாக வாயுடனே
சேர்ந்து நின்று போரிட்டுச் சிதறோட வைத்திடுவேன்
அப்போது ஒழிந்து கொள்ளும் அசலான பேடிகளே
இப்போதுதான் நீங்கள் என்னை விட மேலோரோ?

என்றினைய கேட்டு எக்காளம் தானிட்டு
கன்றும் முகத்துடனே கட கடெனத்தான் சிரித்து
தன்னுடைய கூற்றே சரியாமெனப் பகர்ந்து
மின்னல் முழக்கம் போல் மேலார்த்து நின்றதுவே
 

சுட்டு விரலும் சொற் பொழிவு ஆற்றியதும்
நட்ட நடு விரலும் நன்றாகத் தான் நிமிர்ந்து
கெட்டவரைப் பார்ப்பது போல் கீழிறங்கப் பார்த்து விட்டு
கட்டமதைத் தானுணர்ந்து கனைப்புடனே கூறியதே

ஏனப்பா நமக்குள்ளே எதிற்புக்கள் பல வேண்டும்
யாரப்பா உயர்ந்ததென நனறாய் கணித்திடலாம்
வாருங்கப்பா நாங்கள் வரிசையாய் நின்றிடலாம்
அப்போதப்பா தெரியும் அதில் யார் உயர்ந்ததென்று

நானே உயர்ந்தவன் நானே உயர்ந்தவன்
நல்ல வழி இஃதிருக்க நமக்குள்ளே சண்டை ஏனோ?
என்று பகர்ந்தே எளிதாகத் தன் பெருமை
கூறாமல் கூறிக் குறுநகை புரிந்ததுவே

நெடிய விரல் இது கூறி நிமிர்ந்து நின்றது கண்டு
மோதிர விரல் எழுந்து முழு மூச்செறிந்து விட்டு
கதித்தவன் தானென்ற காரணத்தைக் காட்டுதற்கு
கொதிப்புடன் பார்த்துக் கூறியதே தன் பெருமை

பொன்னும்;  மணியும் புகழ் வைர மோதிரமும்
இன்னும் பல அணிகள் எனக்கேன் அணிகின்றார்?
சின்னத்தனம் கொண்ட சீரழியும் கீழோரே!
என்தனது அந்தஸ்து இதனால் அறியீரோ?

தொன்று தொட்டு நான் வாழும் தோரணையைத் தேராமல்
மின்றி வந்த கீழோரே மேன்மைதனை உணர்ந்தீரோ
என்று பகர்ந்து இறுமாப்புடன் நின்று
துன்றும் பெருமையுடன் சுழல் நோக்கு நோக்கியதே

மோதிர விரலும் முன்னுள்ள மூவிரலும்
கோதிலா வீரர்கள் போல் குறு குறுப்பாய் நிற்கையிலே
விதியின் செயலாலே விரலுள்ளே சிறுத்த விரல்
பதி போலத் தானும் பண்பாக நோக்கியதே

எல்லோரும் நும் பெருமை எடுத்தெடுத்தியம்புகின்றீர்
எல்லோரிலும் நான் உடலால் சிறுத்தோன்தான்
பல்லுலகும் உய்வதற்குப் பரம் பொருளை நாடுதற்காய்
செல்லுகின்ற இடமேது தேவாலயம்தானே 

அவ்விடத்தில் சென்று நின்று ஆண்டவனைத்தான் துதிக்க
செவ்விதனைப் பார்த்து நாங்கள் சீர் வரியில் நிற்கையிலே
நான்தானே முன்நின்று நன்றாய் தொழுகின்றேன்
இன்மை முதல் போக்கும் என்னை உணர்வீரோ

இதனை உணராமல் ஏதேதோ உழறுகிறீர்
பதியை முதல் வணங்கும் பண்புடைய நல்லவன் நான்
கதியோ உமக்கெல்லாம் கடை கெட்ட கீழுலகு
விதியே எந்தனுக்கு மேலான நல்லுலகு


உரைத்த கதைகள் எல்லாம் ஒவ்வொனறாய் தான் கேட்டு
உறக்கம் போல் தானிருந்த உள்ளங்கைதான் சிரித்து
கறங்கிதழ்கள் போல் காணும் கை விரல்களைப் பார்த்து
மறந்த நிலமைதனை மாண்பாய் உணர்த்தியதே

அமெரிக்காக் கண்டம் போல் ஆன பெரு விரலே
ஆபிரிக்கா போன்ற ஆள்சுட்டு விரலாரே
ஆசியாக் கண்டம் போல் ஆகப் பெருத்தவரே
ஐரோப்பா போன்ற அழகுடைய விரலாரே

ஒளஸ்திரேலியா போன்று ஆகச் சிறுத்தவரே
கொதிப்புடன் நீவிர் எல்லாம் கூறியவை நான்கேட்டேன்
விதியை உணராமல் வீண் பெருமை கொள்ளுகின்றீர்
பதி இயல்பைத்தான் உணர்ந்தால் பகை எதுவும் வாராதே

ஒவ்வொருவரும் நீவிர் ஓர் கருத்தில் உயர்ந்தோர்தான்
ஒளவை எனும் மூதாட்டி அன்றொரு நாள் சொன்னாளே
எவ் விதத்திலும் யாரும் எண்ண வேண்டாம் பெருமை என்ற
செவ்விதனைப் போற்றி நின்றால் சிறப்புண்டாம் எல்லோர்க்கும்

ஒன்றுபட்டு நீவிர் எல்லாம் உழைப்பதினால் காரியங்கள்
தொன்று தொட்டு நிறைவேறும் சூக்குமத்தை அறியீரோ
வென்றுவிட்டோம் என்று சொல்லி வேறுபட்டு நின்றீரேல்
அன்று தொட்டு நீவிரெல்லாம் அல்லற்படநேரும்


ஆகையினால் தோழர்களே ஆழ்பவனை நாமுணர்ந்து
சாகையினால் வகுத்திட்ட சாஸ்திரங்கள் பலகற்று
ஈகையினால் எல்லோர்கும் எடுத்தியம்பி நித்தமுமே
வாகையுடன் வாழ்ந்திடுவீர் மானிடர்கள் உணர்ந்திடவே
                                          தர்மா







 

                                        பயணம்

புதை  குழியை நோககிப் பயணிக்கும் மனிதன்தன்
இதையத்துள் தேக்கி வைத்த எண்ணங்களோ கோடி
விதைத்து விட்ட வினைகளெல்லாம் விருட்சமாகி நிற்க
நினைத்ததெல்லாம் சிதைந்து போகச் சிதையை நோக்கிப் பயணம்


கதையளந்து செயலிழந்து மதி மயங்கி மனிதன்
சதை வளர்த்து இயல்பில் மிருக இச்சை கொண்ட சனியன்
எதையும் கூறி மமதை கொண்டு இறுமாந்து திரிந்து
கதை முடிந்து கடசியாகக் காடு நோக்கிப் பயணம்


உலகதனில் தானொருத்தன் தவிர மற்றோரெவரும்
உயர்வு இல்லை என இயம்பிப் பழிப்புரைத்த மனிதன்
அயர்வில்லாமல் அயலவனை அவமதித்துத் திரிந்து
துயரதனிலே துவண்டு சுடலை நோக்கிப் பயணம்


அடுத்திருந்து கெடுப்பதுவும் கெடுத்து விட்டுக் கேலி
எடுத்தெடுத்து இயம்புவதும் இலாபமது நாடி
வடுத் தொழிலே புரிவதுவும் வருத்தத்தையே தேடி
படுத்ததோடு முடிந்த அவன் பாடையிலே பயணம்


வேர்த்த வேர்வை துடைப்பதற்கும் விட்டிடாமல் வேலை
கார்த்திருந்து வாங்கித் தொழிலாழிகளை மாய்த்து
சேர்த்து வைத்த பணப்பங்குக்காய் சிறார் பகைக்க வைத்து
பார்த்த எதிர் பார்ப்பு எல்லாம் பறந்திடவே பயணம்


பிறந்தவுடன் தொடங்குகின்றான் பயணமதை மனிதன்
கறந்து இட்ட தாயையும்தான் அனுப்புகின்றான் பயணம்
இறந்திறந்து இடு காடு ஏகக் கண்டும் நயனம்
மறந்ததேனோ உண்மைதனை வளம் படைத்த இதயம்

                                       தர்மா