ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமிகோவில் நவகுண்டபகூp பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்திவிழா 31-08-2011 பிரதிஷ்டா பிரதமகுரு சிவப்பிரமஸ்ரீ வை.மு.பரம.சண்முகராஷசிவாச்சாரியார்.

Friday 3 June 2011


  
அருவமும் உருவமுமாகி அனாதியாய் பலவாய் ஒன்றாய் 
                பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி
  கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒருதிரு முருகன் வந்தங்கு உதித்தனன் உலகமுய்ய.

Wednesday 11 May 2011

ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமி கோவில்

அருள்மிகு ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமி ஆலயம் இலங்கைத் திரு நாட்டின் வவுனியா மாவட்டத்தின் வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான்புதுக்குளம் என்னும் அழகுமிகு கிராமத்தில் அமைந்துள்ளது.  வவுனியா நகரத்திலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் ஏ9 சாலையில் 12 மைல் தூரம் சென்று பன்றிக்கெய்தகுளத்தில் இறங்கி சேமமடு செல்லும் சிறுசாலையில் சுமார் நான்கு மைல்கள் சென்றால் இத் திருத்தலத்தை அடையலாம்.

எழில் கொஞ்சும் கிராமமாகிய ஆறுமுகத்தான்புதுக்குளம் முல்லையும் மருதமும் முயங்கிய பூமியாய்,வடக்குத் திக்கும், தெற்குத் திக்கும், கிழக்குத் திக்கும் பச்சைப்பசேலென பரந்து விரிந்த செந்நெல் வயல்களும், மேற்குத்திக்கிலே நீர் நிறைந்து விளங்கும் செங்காரஆத்தி மோட்டைக்குளமும் சூழ்ந்து அழகுக்கு அழகூட்ட, ஆத்திமோட்டைக்குளக்கரையிலே அடர்ந்த மருத மரங்களும்,நாவல் மரங்களும,கொன்றை மரங்களும் பனிச்ச மரங்களும் சூழ்ந்த குளிர்மையான சூழலிலே  வேண்டுவார் வேண்டுவதை ஈயும் ஆத்திமோட்டைப்பிள்ளையார் கோவில் கொண்டு அருள் பாலிக்கின்றார்.

வானளாவ உயர்ந்த மாஞ்சோலைகளும், தீங்கனி நல்கும் பலாச்சோலைகளும்,வளமான வாழைத்தோட்டங்களும், தென்றலிலே தலை விரித்தாடும் தென்னந்தோப்புக்களும் அழகுக்கு மெருகூட்ட, வளத்துக்கு வலுவூட்ட, செழிப்புக்குச் சிறப்பூட்ட அமைந்து விளங்கும்
ஆறுமுகத்தான்புதுக்குளம் என்னும் ஊரிலே அறுமுகப்பெருமான்  கோவில்கொண்டு அருள் பாலிக்கும் கருணையே கருணை! புதுமையே புதுமை!.

வன்னிப்பகுதியில் மிகவும் புதுமை நிறைந்ததாக விளங்கும் இக்கோவிலின் தோற்றம் பற்றிச் சரியான சரித்திரம் கிடைக்காத போதிலும் இக்கோவிலின் இடிபாடுகளில் இருந்து பெறப்பட்டபெரும் கருங்கற் தூண்களை நோக்குமிடத்து இக்கோவில் சோழர் காலத்திற்கும் முன்னைய காலமாக இருக்குமோவென எண்ணத் தோன்றுகிறது.

வன்னி மகாநகரம் வளம் கொழித்து உணவுப் பொருட்களை ஈழத்திலிருந்து ஏற்றுமதி செய்ததற்கான சங்க இலக்கியம் பகரும்  
"ஈழத்துணவும் காழகத்தாக்கமும்" என்னும்; வரிக்கு சாட்சியம் கூறும் சான்றுகளாக, இவ்வூ ரின் மருங்கேயுள்ள காடுகளில் உடைந்துபோன குளங்களும், கரைந்துபோன கரைக்கட்டுக்களும், இடிந்துபோன மாளிகை எச்சங்களும், இவை சம்பந்தமாகக் கூறப்படும் கர்ணபரம்பரைக் கதைகளும் பறை சாற்றுகின்றன.

1958ம் ஆண்டிலே ஏற்பட்ட இனக்கலவரத்திலே வடமத்திய மாகாணத்திலேயுள்ள தமிழர்களுக்குச் சொந்தமான வளமான வர்த்தக நிலையங்கள் நெருப்புக்கு இரையாக்கப்பட்டு சாம்பராகி மண்ணோடு மண்ணாக்கப்பட அங்கிருந்து இடம் பெயர்ந்த தும்பளை பருத்தித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட பலரையும், காடாகஇருந்த ஆறுமுகத்தான்புதுக்குளத்தின் அண்மைக்கிராமங்களில் வாழ்ந்த பலரையும் சேர்த்து பண்டிதமணி திரு சி.சின்னையா ஆசிரியர் அவர்களின் செயல் திட்டத்திலே, காடுகள் வெட்டி, களனிகளாக்கி, குடிசைகள் அமைத்து, ஆறுமுகத்தான்புதுக்குளம் என்னும் ஆதிகாலப் பெயரையே சூட்டி, இடிபாடுகளாக இருந்த கந்தசுவாமி ஆலயத்தின் இடிபாடுகளை நீக்கி புதிதாகக்கட்டி, 1962ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்து பின்னர் ஒவ்வோர் வருடமும் ஆவணி மாதத்தில் அலங்கார உற்சவங்கள் பத்து நாட்களும் விமரிசையாக நடைபெற்றும், அதனைத் தொடர்ந்து வரும் கந்தர்சஷ்டி விரதத்தில் கந்தபுராணம் படித்துப் பயன் விரித்துரைப்பதும், சூரன் போரை மிகவும் விமரிசையாக நடத்தியும் தொடர்ந்து கார்த்திகைப்பரணி, பெருங்கதை, மார்கழித் திருவெம்பாவைக் காலங்களில் திருவாதவூரர் அடிகள் புராணம் படித்து பயன் விரித்துரைப்பதும், தொடர்ந்து வரும் எல்லா விசேஷ நாட்களிலும் விசேஷ பூசைகளும், நித்திய பூசையாக இருகாலப்பூசைகளும் நடைபெற்று வந்தது. இப்பூசைகளையெல்லாம் ஆறுமுகத்தான்புதுக்குளம் மக்களும், சுற்றாடல் கிராம மக்களும் முறையேற்றுச் செய்து வந்தார்கள்.

ஆறுமுகத்தான்புதுக்குளத்தின் அறுமுகன்ஆலய உபய ஊர்கள்
பசுமைநிறை பன்றிக்கெய்தகுளம் பக்கத்தின் விளக்குவைத்தகுளம்
மாண்புடை மரையடித்தகுளம் மருங்கின் பெரியபுளியங்குளம்
செங்காராத்திமோட்டை சீர்பெற்றிலங்கும் மாளிகை
அறனுடை நொச்சிக்குளம் அழகுடை அலைகல்லுக்குளம்
வளம் பெறும் சேமமடு வகுத்த இரு பெரும் பிரிவும்
வினாயகபுரமும் சேரும் விளங்கு சம்மளங்குளமும்
ஆகிய இவ்வூரெல்லாம் அறுமுகற்குபயம் செய்யும்.

இப்படியாக ஆறுமுகத்தான் புதுக்குளத்தைச் சூழவுள்ள ஊர்கள் உபய ஊர்களாய் இருந்த போதிலும், வன்னி மாவட்டத்தின் அனேகமான ஊர் மக்களும், முல்லைத்தீவு மாவட்டத்தின் சில ஊர் மக்களும் இக்கோவில் அமைவதற்குப் பங்களித்துள்ளதோடு விசேட விழாக்காலங்களிலும், விசேட பூசைத் தினங்களிலும் வருகை தந்து முருகப்பெருமானுக்கு ஆராதனைகள் செய்வித்து வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

இவ்வாலயத்தின் மூலஸ்தானத்தில் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது பரிவார தெய்வங்களாக வினாயகர், பைரவர் போன்ற தெய்வங்கள் வீற்றிருக்கின்றனர் .இத்தெய்வங்களுக்குத் தனித்தனி சந்நிதிகள் உண்டு. உற்சவ மூர்த்தியாக வள்ளி, தேவயானை சமேத சுப்பிரமணியப்பெருமான் உள்ளார்.

இவைகள் எல்லாம் 1996 ம் வருடத்திற்கு முன்னைய நிலைமைகள.; நிகழ்காலமாகக் கூறப்பட்டிருக்கின்றன.

ஜெயசுக்குறு இராணுவ நடவடிக்கையின் போது  தொடர்ந்து வந்து விழுந்த எறிகணைகளால் ஒன்று, இரண்டு உயிரிழப்போடு, மக்களெல்லாம் ஊரைவிட்டே ஓடினார்கள். உலகத்தின் தெருக்களெல்லாம் ஓலமிட்டே ஓடினார்கள். துன்பமும், துயரமும் தொடர்ந்து துரத்திட, ஓடஓட விரட்டி எறிகணைகளும், இராட்சதப் பறவைகளும் எரிகுண்டுகளை அவர்கள் மேல் உமிழ்ந்திட, முருகா! முருகா! எனும் நாமத்தைத் தம்முள்ளே உச்சரித்து, உச்சரித்து காடுகளிலும், மேடுகளிலும், கட்டாந்தரைகளிலும் உயிரைமட்டும் கையிலே பிடித்துக்கொண்டு ஒதுங்கிக்கொண்டார்கள்.

இலட்சக்கணக்கில் உயிர்கள் பலியானபின் ஒருவாறு போர் ஓய்ந்திட அகதிகளாய், அடிமைகளாய் முட்கம்பிவேலி முகாம்களில் அடைக்கப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டு
ஊரை வந்து பார்த்தபோது 15 வருடங்களுக்கு மேலாகத் தாம் விட்டோடிய கிராமங்களெல்லாம் அடியோடு அழிக்கப்பட்டு, பயன்தருமரங்களும், தாம் வசித்த வீடுகளும் பஸ்மீகரமாகியும், காணிகளெல்லாம் காடுகளும், முட்புதர்களும் மண்டியும்
இருந்தாலும், தம் கிராம மக்களும், சுற்றுக்; கிராம மக்களும் தம்மில் எவரையும் பறி கொடாது உயிரோடு உலாவருவதைப் பார்த்து இது தமது குலதெய்வம் கந்தசுவாமிப் பெருமானின் கருணையே என்று,  முருகன் மீது அசையாத நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

தாம் குடிசைகளிலும், கூடாரங்களிலும் வாழ்ந்தாலும், முருகப்பெருமானின் கோவிலைப் புனரமைத்து, கும்பாபிஷேகம் செய்து முருகப்பெருமானுக்கு விழாவெடுக்க வேண்டுமென்று விழிப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இழப்பதற்கு உயிரைத்தவிர எதுவும் அற்றவர்களான அவர்கள் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமது உறவுகளிடம் அதற்கான நிதியுதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். வெளிநாடுகளில் வாழும் பலர் ஏற்கெனவே தமது பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். பலர் சில புனருத்தாரண வேலைகளைப் பொறுப்பேற்றுச் செய்து கொடுத்துக் கொணடிருக்கின்றார்கள். வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாது இருக்க வேண்டும் என்று கொடைக்கு இலக்கணம் கூறும் எம்மக்கள் இன்னமும் வாரிவாரி வழங்குவார்கள் என்னும் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

                                                                                                       பொ.தர்மகுலசிங்கம்.